articles

img

மருந்துகள், தடுப்பூசிகள் தயாரிப்பில் தனியார் மட்டும் ஈடுபடுவதேன்?

இந்திய சுகாதார உள்கட்டமைப்பு இப்போது பெரும்இருள் சூழ்ந்த நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. கோவிட் பெருந்தொற்று குறைந்து வருகிறது. ஆனாலும் அதன் சுவடுகள் பெரிய ரணங்களை உண்டாக்கி உள்ளது. குறிப்பாக சுகாதாரக் கட்டமைப்பை மீண்டும்சீரமைக்க வேண்டும் . அப்படி செய்ய தவறும் பட்சத்தில் இழப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை காலம் உணர்த்துகிறது. இந்த பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகள் இல்லாமல் போயிருந்தால் என்னவாகியிருக்கும் என ஒரு கணம் யோசித்தால் போதும். கொரோனாவால் மரணித்தவர்களில் எண்ணிக்கையில் நாமே முதலிடத்தில் இருந்திருப்போம். மருத்துவம் என்பது தற்போது 70 சதவீதம் தனியார், 30 சதவீதம் பொது(அரசு சார்) மருத்துவமனைகள் எனும் நிலைக்கு வந்து விட்டோம். மத்திய  அரசோ தன்னுடைய மொத்த வரவு செலவில் 1.12 சதவீதம் எனும் சொற்ப தொகையை மட்டுமே செலவிடுகின்றது, மக்களோ தங்களின் வருமானத்திலிருந்து பெரிய தொகையை மருத்துவத்துக்கு செலவழிக்கின்றனர். சமீபத்திய கோவிட் காலத்தில் தனியார் மருத்துவமனைகள் எப்படி தன்னிடம் வந்த நோயாளிகளை லாப நோக்கோடு  கசக்கிப் பிழிந்தன என்பதை பற்றி ஒரு பெரிய புத்தகமே எழுதலாம். அந்தளவுக்கு லாப வெறியோடு மக்களை சுரண்டியது நாடறிந்ததே. 

கள நிலவரம் சொல்லும் சேதிகள் 
மருத்துவம் என்பது ஒரு வணிகச் சந்தையாக உலகமயமாக்கல் காலத்தில் மாறியது. அதன் விளைவுகள் இன்று நமக்கு கண் முன் உதாரணங்களாக உள்ளன. சந்தையில் சேவை நோக்கோடு இருந்த பொதுத் துறை பங்களிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்ததை பயன்படுத்திதனியார் அதற்கேற்ப தங்களை தகவமைத்து கொண்டு இருந்த வெற்றிடத்தை நிரப்பினர். கூடவே சந்தையில்வெவ்வேறு விதமான தேவைகளும் வலிந்து உருவாக்கப்பட்டன. உதாரணமாக, பொது மருத்துவம், முன்னெச்சரிக்கை சிகிச்சை, அவசர, அதி அவசர சிகிச்சை முறைகள், சிறப்பு சிகிச்சை என எல்லாவற்றையும் வகைப்படுத்தி, புது உத்திகளை கையாண்டது. மக்களுக்கும் அதெல்லாம் புதியதாக தோன்றியது. ஏனென்றால் அவர்கள் அன்று இருந்த அரசு மருத்துவமனைகளில் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பார்த்து சிகிச்சை எடுத்து கொண்டனர். இதுசற்றே வித்தியாசமாக தெரிந்ததாலும், ஊடாக வந்த காப்பீட்டுத் திட்டங்களினாலும், தொடர்ந்து நிலை மாறியது.

இந்த காப்பீட்டுத் திட்டங்களால் பெரிதும் பலன் அடைந்தது தனியாரே. தற்போது மோடி அரசின் ஆகப் பெரிய கவர்ச்சி  திட்டமாக தம்பட்டம் செய்யப்பட்ட “ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தில் 12 கோடி பேர் மட்டுமே இணைந்துள்ளனர். தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆனாலும் அதற்குள் ஒரு திட்டமிடப்பட்ட சுரண்டல் வெளியில் தெரியாமல் நடக்கிறது. தனியார் மருத்துவ மனைகளுக்கும், காப்பீட்டு நிறுவனங்களுக்கும் நல்ல உறவுகள் இருக்கின்றன. அதே காப்பீட்டு நிறுவனம் அரசு பொது மருத்துவமனைகளோடு ஒத்திசைவாக இருப்பதில்லை. மறுபுறம் இது போன்ற மருத்துவமனைகளில் இருக்கும் சில தரகர்கள், நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு சாதுரியமாக இழுத்துச் செல்லும் நிலை தான் உள்ளது. விளைவு காப்பீட்டுத் தொகையோடு கூடுதல் தொகையை கட்டும் பரிதாப நிலை. 

மேலும் அரசு மருத்துவமனைகளில் ஒரு சில சிறப்பு சிகிச்சை பிரிவுகளுக்கான காப்பீடு கிடையாது, அது இந்த வரையறைக்குள் வராது என்றெல்லாம் மடை மாற்றும் வேலை தடையின்றி நடக்கிறது. இது ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் இல்லை. இதனாலேயே அரசு பொது மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் செய்யப்படும் உயர் சிகிச்சைகள் குறைந்து வருகின்றன. இது போன்ற விவரங்கள் வெளியில் தெரிவதும் இல்லை. பொது வெளியில் மக்கள் பிரச்சனைகளாக இதெல்லாம் விவாதப் பொருளாக்கப்பட வேண்டும். 

ஆரோக்கியப் பொருளாதாரம் 
தேவைக்கும் அதை நிறைவேற்றுவதற்குமான இடைவெளி அதிகமாகி வருவதால், மருத்துவத்துக்கான தனிமனிதச் செலவிடல் தொடர்ச்சியாக அதிகரித்தே வருகிறது. இதை கணக்கிடும் போது ஏதோ மருத்துவத் தொகையாக மட்டும் நாம் பார்க்க இயலாது. ஒருவர் நோயுற்றால், அதுஅந்த குடும்பத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து துவங்கி,அவர்களின் பராமரிப்பு, துணை நிற்கும் குடும்பத்தாரின் செலவினங்கள், நோயாளி மற்றும் துணை நிற்பவர்களின் வருமான இழப்பு என அதை கணக்கிட்டால் தலை சுற்றும். மருத்துவம் சார்ந்த செலவினங்களோடு இதை சேர்த்துப் பார்த்தாலே நமக்கு புரியும். நம்மில் பலருக்கும் கூட இந்த அனுபவங்கள் இருக்கக் கூடும்.

காப்பீடு மற்றும் அதையொட்டிய விசயங்கள் பெரும்பான்மையாக ஏழைகளின் வடிகாலாக இருக்கிறது. பணக்காரர்களுக்கு மருத்துவச் செலவிடல் என்பது ஒரு பொருட்டேஅல்ல. அதனால் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் பணம் இருப்பவர்களையே முதன்மையாகவும், காப்பீட்டுத்திட்டங்கள் மூலம் சிகிச்சை பெறுவோரை வேறுவிதமாகவும் சிகிச்சை அளிப்பதெல்லாம் இன்று வெளிச்சத்துக்கு வருகிறது. இந்தியாவில் சுகாதாரப் பிரச்சனை ஒரு 80:20 முறையில் அணுக வேண்டியுள்ளது. அதாவது 20 சதவீத மக்கள்எல்லா விதமான நவீன சிகிச்சை முறைகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். 40 சதவீத மக்கள் மிகப்பெரிய சிரமத்தோடு ( அதாவது சொத்துக்களை விற்பது, சக்திக்கு மீறி கடன் வாங்குவது,) என பல வழிகளில் செலவிடுவார்கள். இது பெரும்பாலும் மத்திய தர வர்க்கத்தில் நடக்கும். மீதமுள்ள 40 சதவீதம் எதையும் செலவழிக்க வாய்ப்பே இல்லாதவர்கள். இந்த 40 சதவீத மக்கள் செலவிட முடியாத கையறு நிலையால், உள்ளூர் அளவிலேயே மருத்துவர்களிடம் சிகிச்சைகளை நீடித்து கொண்டு வருவார்கள். இது சிறு நகர அளவில். கிராமப்புறங்களிலோ எது தங்களுக்கு சாத்தியப்படுமோ அதையே (மாற்று முறை சிகிச்சை) தொடர்வார்கள். 

புறக்கணிக்கப்படும்  ஆரம்ப சிகிச்சை  
இந்திய மக்கள் அதிகமாக கிராமங்களிலேயே இருக்கின்றனர். இதனாலேயே நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டன. அதன் மூலம், படிப்பறிவு இல்லாதவர்கள், பெண்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம், கர்ப்ப காலத்தில் நிகழும் மாற்றங்களுக்கான ஆலோசனைகள், குடற்புழு நீக்கத்துக்கான சிகிச்சை, பல்வேறு நோய் பரவல்பற்றிய தகவல் பரிமாற்றம், அதற்கான தீர்வு என எல்லாவற்றுக்கும் பணிகள் சீராக நடந்ததால் தான் இன்றளவிலும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. ஆனால் இதற்கான அரசின்  வருவாய் ஒதுக்கீடு திட்டமிட்டு குறைக்கப்படுவதால், முன்னர் நடந்தது போல் பணிகள் தற்போது நடைபெறுவதில்லை. அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள் பல மாநிலங்களில் இப்போது செயல்படுவதேஇல்லை. அதே போல் கிராம அளவிலான செவிலியர்கள், செவிலிய உதவியாளர்கள் என பழைய நடைமுறை, விழிப்புணர்வுப் பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை. இம்மாதிரியான பணி முடக்கத்தால், ஏராளமான சேதங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இதெல்லாம் எந்த புள்ளிவிவரக் கணக்குகளில் அடங்குவதில்லை. பொது சுகாதாரம் என்பது அரசுகளின் திட்டச் செலவுகளுக்குள் இல்லாமல் போவதற்கு பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. மருத்துவம் சார்ந்த எந்த ஒரு விசயத்தையும், அறிவிப்பையும் “வாக்கு அரசியலுக்காகவே” பயன் படுத்துகிறார்கள். ஒருகட்டமைப்பை பாதுகாக்கும் எண்ணத்தில் எதுவும் நடப்பதில்லை, விதிவிலக்காக ஒரு சில மாநிலங்களை தவிர.

மாநில அரசுகளின்  நிதி ஒதுக்கீடு என்பது மத்திய அரசின்நிதி ஒதுக்கீடுகளை காட்டிலும் குறைவாகவே இருக்கும். அதிலும் சில மாநிலங்களில் அடிப்படை ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பே இல்லாத நிலை கூட இன்றும் இருக்கிறது. அதனாலேயே சிசு மரணங்கள், சத்துக் குறைபாடு போன்றதுயரங்கள் இன்றளவிலும் தொடர் கதையாகி இருக்கிறது. இந்த துயரங்களை ஊடகங்களும் விவாதப் பொருளாக மாற்றுவதில்லை. இது பேசு பொருளாக மக்களிடத்தில் கொண்டு செல்லப்பட வேண்டும். 

ஊழியர்கள் தேவையும்  மக்கள் சேவையும் 
 2020 ஆம் ஆண்டு நாம் அரசு பொது மருத்துவமனைகளின் தேவைகளை முழுமையாக உணர்ந்த ஆண்டு.இந்த சேவை விரிவாக்கம் செய்யப்பட வேண்டாமா? மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார களப்பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள்  என மருத்துவம் சார்ந்த பலரின் கூட்டு முயற்சியாலும், அயராத தன்னலமற்ற பணியாலுமே நாம் கோவிட் 19 ஐ எதிர் கொள்ள முடிந்தது. இதிலும் ஆட்சியாளர்கள் அரசியல் லாபக் கணக்கு பார்த்தனர். சில மாநிலங்கள் அலட்சியத்தோடும் அறிவியலுக்கு முற்றும் புறம்பான வேலைகளில் ஈடுபட்டனர். அந்த அசிங்கங்களை நாடும் நாமும் இன்னும் மறக்கவில்லை. இந்த நோய்க்காலத்தில் நமக்கு கிடைத்த அனுபவங்கள் ஏராளம். மருத்துவர்கள், அனைத்து மட்டங்களிலும் ஊழியர் பற்றாக்குறை,தொலைநோக்கில்லா செயல் திட்டங்கள், போதிய உள்கட்டமைப்பு இல்லாமை (இடம், பாதுகாப்பு உபகரணங்கள்)  எனபலவற்றை பார்த்தோம். 

மேம்பாலங்களுக்குக் கீழ் படுக்கை வசதியின்றி தவித்தநோயாளிகளின் வேதனைகளை நாம் மறந்திட முடியாது.சுகாதாரப் பணிகளை இன்று அதிகமாக ஒப்பந்த முறைக்கு மாற்றியதாலேயே இந்த அவலங்கள் நீடிக்கின்றன.உதாரணமாக, மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், இருப்பது எவ்வளவு பெரிய வேதனை? இது ஒரு உதாரணம் அவ்வளவே. இந்தியா போன்ற நாடுகள் மருத்துவ உள்கட்டமைப்பை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை கியூபா போன்ற நாடுகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஆகவே ஊழியர்கள் எண்ணிக்கையை அனைத்து மட்டத்திலும் அதிகமாக்க வேண்டும். 

தடுப்பூசி உண்மையான தேவை 
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கோவிட் நோய் தடுப்பூசி அரசியல் விவாதப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது.தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பிரதமர் செல்வது, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் தடுப்பூசி, இது எல்லோருக்கும் போடப்படுமா? அதன் விலை என்னவாக இருக்கும்? யாருக்கு கிடைக்கும்? பரிசோதனைக் கட்டத்திலேயே நடைபெறும் கோளாறுகள் என அன்றாடம் செய்திகள் வருகின்றன. இதில் நாம் அக்கறையோடு கவனிக்க வேண்டிய விசயங்கள் பின்னுக்குப் போய் விட்டன. தடுப்பூசியை தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும் தனியாரே. ஏன்? 

இந்தியாவில் மருந்துகள், தடுப்பூசிகள் தயாரிக்கும் பொதுத் துறை நிறுவனங்களும் இன்று மூடப்பட்டு விட்டன. விளைவு மக்கள் தேவைக்கு தனியாரை மட்டுமே நம்பியிருக்கும் அவல நிலை. அதனாலேயே அந்த தடுப்பூசிஎன்ன விலைக்கு சந்தையில் விற்கப்படும் என்பதைச் சொல்ல முடியவில்லை. அனைவருக்கும் கிடைக்குமா என்பதும் கேள்விக் குறி தான். இந்த மக்கள் விரோத அரசியல் பற்றி மக்களிடையே பரப்புரை செய்யப்பட வேண்டும். மருத்துவம் என்பது மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவை. அதை மக்கள் பெறுவதற்கு அரசுகளே உதவிடவேண்டும். அது எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும். 

-===ந.சிவகுரு===

;